Wednesday, October 21, 2015

நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து.

நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நடிகர் சரத்குமார் அளித்துள்ள விளக்கம் குறித்து நடிகர் சங்க புதிய தலைவர் நாசர் மற்றும் புதிய செயலாளர் விஷால் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம்
கூறும்போது, ''நான் கடந்த 2000–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இரண்டு முறை பொதுச்செயலாளராக இருந்தேன். 2006–ம் ஆண்டு முதல் 2015–ம் ஆண்டு வரை தலைவராக இருந்து 15 வருடங்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிந்து இருக்கிறேன்.

நடிகர் சங்கம் மீண்டும் எந்த சூழ்நிலையிலும் கடனில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துடன் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. மாநகராட்சியிடம் உரிய முறையில் அனுமதி பெற்று பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துக்கு 29 வருடங்கள் 11 மாதங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

இதன்மூலம் மாதந்தோறும் ரூ.24 லட்சம் வருமானம் நடிகர் சங்கத்துக்கு வர இருந்தது. 2,500 சதுர அடியில் நடிகர் சங்கத்துக்கு அலுவலகம் அமைத்து தருவதாகவும், மாதந்தோறும் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக ரூ.1 கோடி தருவதாகவும் அந்த நிறுவனத்தினர் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து 29 வருடங்கள் 11 மாதங்களுக்கு குத்தகைக்கு விடுவது என்றும், அப்போதைய தலைவர், செயலாளருடன் பேசி அதை நீடிக்க செய்வது அல்லது முடித்துக்கொள்வது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

நடிகர் சங்கத்தின் நிலம்தான் குத்தகைக்குவிடப்பட இருந்தது. நிலத்தை விற்கவில்லை. இந்நிலையில் தான் நடிகர் சங்க தேர்தலின்போது எதிரணியினரால் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், முறைகேடுகளும் சுமத்தப்பட்டன, அவை என்னை மிகவும் காயப்படுத்தின. இது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. அதனால், எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த ஒப்பந்தம் போட்டது மூலம் எனக்கு ஏற்பட்ட வலிகளையும், காயங்களையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு சம்மதித்தார்கள்.

கடந்த செப்டம்பர் 29–ந் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்மூலம், என் மீதான களங்கத்தை துடைத்துவிட்டதாக கருதுகிறேன். இதை கடந்த வாரம் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்திலேயே வெளியிட இருந்தேன்.

அப்போது கூறியிருந்தால், இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று எதிரணியினர் கூறிவிடுவார்கள் என்றும், அதுவே உங்களுக்கு தேர்தலில் பலவீனமாகிவிடும் என்றும் நண்பர்கள் கூறினார்கள். எனவேதான், அன்று ஒப்பந்தத்தை ரத்து செய்த விவரத்தை கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றபின் இதை அறிவிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

ரத்து செய்த ஒப்பந்தத்தை எங்கள் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம்கி மூலம் இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாசரிடம் ஒப்படைக்க இருக்கிறேன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டு இனிமேல் நிறுத்தப்பட்டுவிடும் என்று கருதுகிறேன்" என்று கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் சங்க புதிய தலைவராகவும், புதிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாசரும், விஷாலும் கூறும்போது, ''கட்டட ஒப்பந்தம் ரத்து செய்தது தொடர்பாக எங்களுக்கு இதுவரை எதுவும் தெரியாது. ஒப்பந்தம் போட்டபோது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுத்ததாக சரத்குமார் தெரிவித்திருந்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பே புதிய கட்டடத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். இது புதிய தகவலாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்காதது ஏன் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தம்  ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை ஆராய்ந்த பிறகே முடிவு எடுப்போம். மேலும் இதை, நடிகர் சங்க செயற்குழு, பொதுக்குழுவை கூட்டியே முடிவு செய்திருக்க வேண்டும்.

நாங்கள் நாடக நடிகர்கள் நலனுக்காக பாடுபடுவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. இப்போதுதான் பொறுப்புக்கு வந்துள்ளோம். பெயர் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்றார் நாசர்.

புதிய செயலாளர் விஷால் கூறும்போது, ''நடிகர் சங்கத்தின் முதல் முடிவாக மூத்த நடிகை சச்சுவுக்கு வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. மூத்த நாடக-நடிகர்கள், கலைஞர்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும். நலிந்த நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எங்களின் முதல் நோக்கம்.

அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் பாடுபடுவோம்.

நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்காக தான் போராடினோம். அதற்காகவே இந்த பொறுப்புக்கும் வந்துள்ளோம். எங்கள் பணிகளை தொடங்கிவிட்டோம். மறுபடியும் இங்கு கட்டடம் வரும்." என்றார்.

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: